
அலோர் ஸ்டார், ஜனவரி-7,
ஃபிரான்சிஸ் லைட் கெடா சுல்தானுக்குச் சொந்தமான நிலத்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியதை வரலாற்று ஆவணங்கள் உறுதிப்படுத்துவதாக, கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹமட் சனுசி நோர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான வரலாற்று மற்றும் சட்ட ஆவணங்களின் ஆய்வு பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன என்றார் அவர்.
இந்த ஆய்வுகள் நிறைவுப் பெற்றதும், பினாங்கு மீது கெடா மாநில அரசு உரிமை கொண்டாடுவது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இவ்வாண்டுக்குள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
வரலாற்று பதிவுகளின்படி, 1786-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி, ஃபிரான்சிஸ் லைட் கெடா சுல்தானின் அனுமதியின்றி
யூனியன் ஜேக் கொடியை பினாங்கில் ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து, இந்த நிலப் பிரச்சினை மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடைபெற்றதாக கெடா அரசு கூறி வருகிறது.
கெடா அரசு வழக்குத் தொடர்ந்தால், அதனை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என பினாங்கு அரசு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



