
கோலாலம்பூர், அக் 1 –
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு சொந்தமானதாகக் கூறப்பட்ட RM169 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ரொக்கப் பணம் இன்று அதிகாரப்பூர்வமாக மலேசிய அரசாங்கத்திற்கு சொந்தமானதாக பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தத் தொகையில் 14 கோடியே 77 லட்சத்து 2,150 ரிங்கிட்டுடன் பல்வேறு வெளிநாடுகளின் பண நோட்டுக்களும் அடங்கும்.
பறிமுதல் நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்வமுள்ள எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் கேள்வி எழுப்பவில்லை என்பதால் , அரசாங்க துணை வழக்கறிஞர் மஹாதி அப்துல் ஜுமாஹாட்டின் ( Mahadi Abdul Jumaat ) விண்ணப்பத்தை அனுமதித்த பின்னர், பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுசானா ஹுசின் ( Suzana Hussin ) உத்தரவிட்டார்.
செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில், பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட இஸ்மாயில் சப்ரி மற்றும் அவரது முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோ முகமது அனுவார் முகமது யூனுஸ்( Mohamad Anuar Mohd Yunus ) ஆகியோர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (MACC)யினால் கைப்பற்றப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வதற்கான அரசுத் தரப்பு விண்ணப்பத்தை எதிர்க்க விரும்பவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.