
கோலாலம்பூர், பிப்ரவரி 24 – கெந்திங் குழுமத்தின் நிறுவனர் மறைந்த டான் ஸ்ரீ லிம் கோ தொங் (Tan Sri Lim Goh Tong) அவர்களின் மகளான லிம் சியூ கிம் (Lim Siew Kim) விட்டுச் சென்றதாகக் கூறப்படும் 1.6 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துப் பங்கீட்டைச் சுற்றி குடும்பத்தினருக்குள் கடுமையான சட்டப் போராட்டம் தொடங்கியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சியூ கிம் அவர்களின் மகள்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
2022 ஏப்ரல் 28 அன்று தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இறுதி வசியத்தை செல்லாது என அறிவிக்கவும், தாயார் வசியம் இன்றி இறந்தவராக கருதப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.
1.6 பில்லியன் ரிங்கிட் சொத்திலிருந்து தங்களுக்கு முறையே 900,000 ரிங்கிட் மற்றும் 100,000 ரிங்கிட் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அது நியாயமான பங்கீடு அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவலின்படி, அவர்களின் சகோதரர் மார்கஸ் சொத்துகள் மற்றும் மீதமுள்ள வாரிசு சொத்தில் 30 விழுக்காட்டு பங்கை பெற்றுள்ளதுடன், பெரும்பாலான சொத்து அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சில சாட்சிகளை நீக்க வேண்டும் என்ற மனுவில் தீர்ப்பு வழங்க உயர்நீதிமன்றம் மார்ச் 2ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.



