
பெந்தோங், ஆகஸ்ட்-7 – ஆகஸ்ட் 2-ஆம் தேதி கெந்திங் மலை கேசினோவில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கேசினோ சில்லுகள் திருடுபோனது தொடர்பான விசாரணைக்காக, 44 வயது ஆடவர் போலீஸாரால் தேடப்படுகிறார்.
உள்ளூரைச் சேர்ந்த விக்டர் லீ (Victor Lee) எனும் அந்நபர் கடைசியாக, காஜாங், தாமான் டாமாய் பெர்டானா செராஸ் எனும் முகவரியைக் கொண்டிருந்ததாக, பெந்தோங் போலீஸ் கூறியது.
மூடப்பட்ட கேசினோ அறையிலிருந்து அந்த 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கேசினோ சில்லுகள் திருடப்பட்டதாக, கேசினோ சூதாட்டங்களுக்கு முக்கியப் புள்ளிகளை அழைத்து வரும் junket நிறுவனத்தின் மேலாளர் முன்னதாக போலீஸில் புகார் செய்திருந்தார்.
இந்நிலையில், அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர், பெந்தோங் போலீஸ் நிலையத்தையோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையங்களையோ தொடர்புக் கொள்ளலாம்.
2023-ஆம் ஆண்டு இதே போன்றதொரு சம்பவத்தில், கெந்திங் கேசினோ சூதாட்ட அறையின் அவசர கதவை உடைத்து உள்ளே நுழைந்த இருவர், 4.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கேசினோ சில்லுகளைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.
எனினும் இருவரும் பின்னர் கைதாகினர்.