
கோலாலம்பூர், ஆகஸ்ட்-16 – வியாழக்கிழமையன்று பினாங்கு கெப்பாளா பாத்தாஸில் (Kepala Batas) தாம் நடத்திய பேரணி தொடர்பில், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr அக்மால் சாலே போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நேற்றிரவு 11 மணி வாக்கில் டாங் வாங்கி போலீஸ் நிலையம் சென்ற அக்மால், இன்று அதிகாலை 1.25 மணி வரை வாக்குமூலம் அளித்தார்.
மலாக்கா, மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான அக்மாலிடம் சுமார் 80 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், போலீஸுக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அக்மாலின் வழக்கறிஞர் கூறினார்.
தேச நிந்தனைச் சட்டம், குற்றவியல் சட்டம், தொடர்பு மற்றும் பல்லூடச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார்.
அக்மாலுக்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில் அம்னோ இளைஞர் பிரிவினர் போலீஸ் நிலையத்தின் முன் கூடியிருந்தனர்.
முன்னதாக வெறுப்புணர்வைத் தூண்டி பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் அக்மால் பேசியிருந்த ஃபேஸ்புக் வீடியோ தொடர்பில் அவர் விசாரிக்கப்படுவார் என போலீஸ் கூறியிருந்தது.
பினாங்கில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி செய்யப்பட்ட 2 போலீஸ் புகார்கள் தொடர்பில் அந்த விசாரணைத் தொடங்கியது.
பினாங்கில் சீன முதியவர் ஒருவர் தேசியக் கொடியைத் தலைக்கீழாக பறக்க விட்ட சம்பவம் தொடர்பில், தனது பரிவாரங்களோடு கெப்பாளா பத்தாஸுக்கே சென்று அக்மால் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.