
கோலாலம்பூர், அக்டோபர் -29,
கெப்போங் வணிகப் பூங்காவின் (Kepong Commercial Park) முன்பகுதியிலுள்ள, வாகன நிறுத்துமிடத்தில் வரி செலுத்தாத சிகரெட்டுகளை லாரியிலிருந்து இறக்கி வேன்கள் மற்றும் காரில் ஏற்றி கொண்டிருந்த நான்கு ஆண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
செந்தூல் காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையில், 6.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட சிகரெட்டுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை தலைவர் டத்தோ ஸ்ரீ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.
மேலும் மூன்று வேன்கள், இரண்டு லாரிகள், ஒரு கார் மற்றும் எட்டு கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 9.5 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சுங்கச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, போலீசார் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையைத் தடுக்க புலனாய்வைத் தொடர்ந்து வலுப்படுத்துவார்கள் என அஸ்மி தெரிவித்துள்ளார்.



