
கெமாமான், செப்டம்பர்-21,
திரங்கானு, கெமாமான், கெர்த்தே அருகேயுள்ள கம்போங் சாபாங் (Kampung Chabang) பகுதியில் நேற்று காலை எரிவாயு குழாய் கசிவு ஏற்பட்டதை, PGB எனப்படும் Petronas Gas Berhad உறுதிப்படுத்தியுள்ளது.
காலை 9.50 மணியளவில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாகவும், எனினும் சம்பவ இடம் உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் PGB தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட குழாய் தனிமைப்படுத்தப்பட்டு, அவ்விடம் பொது மக்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு விநியோகம் பாதிக்கப்படவில்லை; மாற்று குழாய் வழியாக விநியோகம் தொடர்ந்ததாக அந்நிறுவனம் மேலும் கூறியது.
இச்சம்பவம் கிழக்குக் கடற்கரை ரயில் திட்டமான ECRL-லின் 5-ஆம் கட்டப் பணித் தளத்தில், அதாவது முதன்மைச் சாலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில், குடியிருப்புப் பகுதிக்கு வெளியே நடந்தது.
என்ற போதிலும், ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாக, Kerteh – Jalan Ranggon சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
சம்பவம் கட்டுக்குள் உள்ளதாகவும், அருகிலுள்ள மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லையென கெமாமான் போலீஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்தனர்.