
கோலாலம்பூர், ஜனவரி-28-இந்தியா, மும்பையில் கைதான மலேசியக் குற்றவாளிகள் மூவர் தாயகம் கொண்டு வரப்பட்டதும், அரச மலேசியப் போலீஸ் படை உச்சக்கட்ட பாதுகாப்பைப் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மூவரும், ‘கேப்டன் பிரபா’ கும்பலின் முக்கியத் தலைவர்கள் என்பதால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் அதிகமாகவே உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Geng 24 கும்பலைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் இவர்களைப் பின்பற்றுவது ஒருபுறமிருக்க, இக்கும்பல் மீது தீரா பகை கொண்டுள்ள போட்டி கும்பல்களும் பழி வாங்கும் படலத்தில் இறங்கலாம் என்பதே, இந்த உயரடுக்கு பாதுகாப்புக்குக் காரணமாகும்.
மும்பை சென்றுள்ள 10 பேரடங்கிய சிறப்பு போலீஸ் படையின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அவர்கள் நாடு திரும்பவுள்ளதாக அறியப்படுகிறது.
தற்போது மும்பை விமான நிலையத்தின் மிக பாதுகாப்பு மிக்க சிறப்பு அறையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய போலிசிடம் ஒப்படைப்பதற்கான அனுமதி ஆவண வேலைகள் நடந்தும் வருகின்றன. எந்த சிக்கலும் இல்லை என்றால் அவர்கள் விரைவிலேயே மிகுந்த பாதுகாப்போடு கோலாலம்பூர் கொண்டு வரப்படுவர்.
KLIA வந்ததும் அதே பாதுகாப்புடன் செப்பாங் போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்படுவர்.
ஆவண சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்ததும், நேரடியாக செப்பாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என புக்கின் அமான் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அம்மூவரும் முன்னதாக பிரிட்டனிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
எனினும், அனைத்துலக அளவிலான ஒத்துழைப்பின் பலனாக, மும்பை விமான நிலையத்தில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



