
கோலாலம்பூர், மார்ச்-30 – பொது மக்களிடம் 10 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்த புகாரில், ‘தான் ஸ்ரீ’ பட்டத்தைக் கொண்ட ஒரு தொழிலதிபர் கைதாகியுள்ளார்.
பணச்சலவை வழக்குகளைத் தீர்ப்பதற்காக போலீஸிடம் ஒப்படைக்கவே அப்பணம் என 59 வயது அந்நபர் பொது மக்களை நம்ப வைத்துள்ளார்.
ஜப்பான், ஒசாகாவுக்கான பயணம் முடிந்து கோலாலம்பூர் Jalan U-Thant -ல் உள்ள தனது வீட்டுக்கு வந்திறங்கிய கையோடு புக்கிட் அமான் போலீஸ் அவரைக் கைதுச் செய்தது.
“பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இன்றைய தேதி வரை 10 மில்லியன் ரிங்கிட்டை அவர் திரட்டியுள்ளார். போலீஸ் உயர்மட்டம் வரை தனக்கு நல்ல தொடர்பிருப்பதாவும், பணச்சலவை வழக்குகளைக் கச்சிதமாக முடித்துக் கொடுப்பதாகவும் கூறி 25 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து அவர் பேரத்தைத் தொடங்கியுள்ளார்”
பணத்தைக் கொடுப்பவர்கள் பின்னாளில் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தில் மாட்டிக் கொள்ளாமலிருக்க, மொத்தப் பணமும் போலீஸிடமே ஒப்படைக்கப்படும் என்றும் அவர்களுக்கு அந்நபர் வாக்குறுதிக் கொடுத்துள்ளதாக, புக்கிட் அமான் வட்டாரம் கூறியது.
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 30 வருட அனுபவம் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைவராக உள்ள சந்தேக நபரை விசாரணைக்குத் தடுத்து வைக்க, இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.