
கேரித்தீவு, ஜனவரி-5,
கேரித்தீவு மண்ணின் மைந்தர்கள் வெகு விமரிசையாக நடத்திய “கேரித்தீவில் பூத்த அரும்புகள்” அகவை அறுபது நிறைவு விழா, நேற்று கேரித்தீவு (கிழக்கு) தோட்ட தமிழ்ப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
1965-ஆம் ஆண்டு பள்ளியில் பயின்ற ஒரே வகுப்பைச் சேர்ந்த 48 மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், மொத்தம் 150-க்கும் மேற்பட்ட நண்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவை திருவிழா கோலமாக மாற்றினர்.
சிறப்பு விருந்தினர்களாக, வணக்கம் மலேசியாவின் நிறுவனரும் தலைமை செயலதிகாரியுமான தியாகராஜன் முத்துசாமி, கேரித் தீவு (கிழக்கு) தோட்டத் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் விமலாம்பிகை இருளப்பனும் கலந்துகொண்டனர்.
இது போன்ற முன்னாள் மாணவர்களின் ஒன்றுக்கூடல் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒன்றென, தியாகராஜன் தமதுரையில் கூறினார்.
முன்னாள் மாணவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது என தலைமையாசிரியை விமலாம்பிகை தெரிவித்தார்.
உறவு விட்டுப் போகக் கூடாது என்பதே இந்நிகழ்வின் நோக்கம் என, ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வாசுதேவன் அதலி வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
ஏற்கனவே ‘அகவை 50’ விழாவில் கலந்து கொண்ட சில நண்பர்கள் இன்று அவர்களுடன் இல்லாததை நினைவுகூரும் வகையில் ஆழ்ந்த துயரமும் தெரிவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்களைச் சந்தித்த அனுபவத்தை, முன்னாள் மாணவர்கள் சிலர் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
மாலை 5 மணி வரை நடைப்பெற்ற நிகழ்ச்சியின் இறுதியில், பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்ற நண்பர்களின் விழியோரத்தில் நீர் துளிகள் மிதந்தன.



