
கோலாலம்பூர், ஏப்ரல்-17, கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில், Medan Klang Lama 28 பகுதியில் அமைந்துள்ள 2 கேளிக்கை மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 31 வெளிநாட்டவர்கள் கைதாகினர்.
கேளிக்கை மையம் என்ற பெயரில் ஈராண்டுகளாக செயல்பட்டு வரும் அம்மையங்களின் உள்ளே வெளிநாட்டுப் பெண்கள் ‘வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும்’ சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து புத்ராஜெயா குடிநுழைவுத் துறையைச் சேர்ந்த 44 அமுலாக்க அதிகாரிகள் சோதனையில் இறங்கியதாக, குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சக்காரியா ஹாபான் தெரிவித்தார்.
38 உள்நாட்டவர் உட்பட மொத்ததாக 68 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அதில், தாய்லாந்து, வங்காளதேசம், லாவோஸ், வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 31 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
அடையாள ஆவணங்கள் இல்லாதது, அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாகத் தங்கியிருந்தது, பெர்மிட்டைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குடிநுழைவுக் குற்றங்களுக்காக அவர்கள் கைதாகினர்.
பிற்பகல் 3 மணி முதல் விடியற்காலை 2 மணி வரை செயல்படும் அம்மையங்களில், உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்குச் ‘சேவை’ செய்ய இந்த வெளிநாட்டுப் பெண்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
‘திருப்தியடையும்’ வாடிக்கையாளர்கள் சால்வை வடிவில் டோக்கன் கொடுத்து விட்டுச் செல்கின்றனர்.
நிறம் மற்றும் 100 முதல் 5,000 ரிங்கிட் வரையிலான எண்கள் வாரியாகப் பிரிக்கப்பட்ட சால்வைகளை, வாடிக்கையாளர்கள் அப்பெண்களுக்கு மாட்டி விடுவதும் விசாரணையில் தெரிய வந்தது.
கைதானவர்கள் மேல் நடவடிக்கைக்காக புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்