
கோலாலம்பூர், ஜூன்-2 – நாளை ஜூன் 3-ஆம் தேதியும் நாளை மறுநாளும் கிள்ளான் பள்ளத்தாக்கு கே.டி.எம். கம்யூட்டர் இரயில் பயணிகளுக்கு 50 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது.
அனைத்து வகை டிக்கெட்டுகளுக்கும் இச்சலுகை பொருந்தும் என KTMB நிறுவனம் அறிவித்துள்ளது.
மே 30 தொடங்கி கெப்போங் மற்றும் சாலாக் செலாத்தான் கம்யூட்டர் இரயில் நிலையங்களில் சமிக்ஞை தரமுயர்த்தும் பணிகள் நடைபெறுவதால் இரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடாக இந்தக் கட்டண கழிவுச் சலுகை வழங்கப்படுவதாக KTMB விளக்கியது.
சமிக்ஞையைத் தரமுயர்த்தும் பணிகள் இன்று ஜூன் 2-ஆம் தேதியோடு முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கிள்ளான் பள்ளத்தாக்கில் Pulau Sebang – Batu Caves – Pulau Sebang கே.டி.எம் கம்யூட்டர் வழித்தடத்திலும், Tanjung Malim – KL Sentral – Tanjung Malim வழித்தடத்திலும்
சேவை நேரம் பாதிக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் KL Sentral – Butterworth, KL Sentral – Padang Besar, Segamat – Padang Besar, Segamat – Butterworth ஆகிய அனைத்து வழித்தடங்களுக்குமான ETS இரயில் சேவைகள் 120 நிமிடங்களுக்கும் மேல் தாமதத்தை எதிர்நோக்கியுள்ளன.
எனவே பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதோடு, KTMB Mobile செயலி வாயிலாகவோ MyRailtime அகப்பக்கம் வாயிலாகவோ பொது மக்கள் பயண நேர அட்டவணை மாற்றங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்