
பெக்கான், செப்டம்பர் 3 – பொருட்கள் விநியோக நிறுவன ஊழியர் மற்றும் போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட தொலைபேசி மோசடி கும்பலிடம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் 68,500 ரிங்கிட் இழந்தார்.
20 வயதுடைய அந்த மாணவி ஆகஸ்ட் 26 அம் தேதியன்று தன்னை விநியோகிப்பு நிறுவன ஊழியராகக் அடையாளம் கூறிக் கொண்ட ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பை பெற்றதைத் தொடர்ந்து இந்த மோசடிக்கு உள்ளானதாக பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan முகமட் சைடி மாட் ஜின் (Mohd Zaidi Mat Zin) கூறினார்.
அதன் பிறகு பேரா போலீஸ் தலைமையகத்தில் உள்ள அதிகாரிக்கு அந்த அழைப்பு இணைக்கப்பட்டதோடு அச்சத்தின் காரணமாக சந்தேக நபரின் ஆலோசனையின் பேரில் பாதிக்கப்பட்ட பெண் தனது பணத்தை ஐந்து வங்கிக் கணக்குகளுக்கு மாற்றும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை பின்பற்றியுள்ளார்.
கூடுதல் பணம் செலுத்தும்படி கேட்ட பிறகு, தான் மோசடிக்கு உள்ளானதாக பாதிக்கப்பட்ட அந்த மாணவி சந்தேகித்து இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார். இந்த மோசடியில் தனது சேமிப்பு உட்பட மொத்தமாக 68,850 ரிங்கிட்டை அந்த மாணவி இழந்துள்ளார் என இன்று வெளியிட்ட அறிக்கையில் முகமட் சைடி தெரிவித்தார். தண்டனைச் சட்டத்தின் 420 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.