
சுங்கை பாக்காப், ஆகஸ்ட் 14 –கடந்த பிப்ரவரி மாதம், சுங்கை பாக்காப்பில் நடந்த கோர சாலை விபத்தில் கடுமையான காயங்களுக்கு ஆளான இரண்டு உடன்பிறப்புகள், கல்வியில் சிறந்த முன்னேற்றம் காட்டி வருகின்றனர் என்று YB செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம் கூறியுள்ளார்.
அக்கோர விபத்தில் 7 வயது நிரம்பிய தர்ஷன் இடது கையை இழந்ததோடு மட்டுமல்லாமல் அவரது 5 வயது தங்கை வலது காலை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆரம்பத்திலிருந்தே அக்குடும்பத்திற்கு பெரும் உதவியாயிருந்த டாக்டர் லிங்கேஸ்வரன், சூழல்கள் காரணமாக சிறுவர்களின் கல்வி ஒருபோதும் பாதிப்படைய கூடாது என்ற நல்லெண்ணத்தில் மலாய், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களைக் கற்பிக்க தனிப்பட்ட ஆசிரியரை நியமித்திருந்தார்.
தற்போது 6 மாதங்களுக்கு பிறகு குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தபோது இருவரும் இன்னும் உடல் ரீதியாக பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டாலும், கற்றலில் காட்டும் ஆர்வமும், தன்னம்பிக்கையும் வியக்கத்தக்க வகையில் உள்ளதென்று அவர் குறிப்பிட்டார்.
உடலில் பாதிப்புகள் இருந்தாலும் கல்வியை விடமால் பற்றிக் கொண்டிருக்கும் இவ்விரு சிறுவர்களும் வாழ்வில் ஒரு சிறப்பான நிலையை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.