கோத்தா கினாபாலு, ஜனவரி-24 – கொடிய விஷத்தன்மை கொண்ட puffer fish எனப்படும் முள்ளம்பன்றி மீன்களை, விற்பனைக்கு தடைசெய்யப்பட்ட இனமாக பட்டியலிடுவது குறித்து சபா அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
எனினும், தற்போதைக்கு அம்மீன்களை விற்கத் தடையில்லை என, சபா விவசாய, மீன்வள மற்றும் உணவுத் தொழில் அமைச்சர் டத்தோஸ்ரீ Dr ஜெஃப்ரி கிட்டிங்கான் ( Jeffery Kitingan) கூறினார்.
இந்த முள்ளம்பன்றி மீன்களில் அதிக அளவு விஷம் உள்ளது; ஆனால் சந்தைகளில் விற்பனைக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் தற்போது அது பட்டியலிடப்படவில்லை.
அதற்குக் காரணம், அம்மீன்களை உண்பதற்கு முன்பாக அவற்றின் நச்சுத்தன்மையை எவ்வாறு அகற்றுவது என்பதை அறிந்தவர்கள் இருக்கிறார்கள் என சபா துணை முதல் அமைச்சருமான அவர் சொன்னார்.
சிலரால் முள்ளம்பன்றி மீன்களைப் பாதுகாப்பாக உண்ண முடியும் என்றாலும், அத்தகைய ஆபத்தை ஏற்படுத்தாத எத்தனையோ வகை மீன் இனங்கள் உள்ளன, அவற்றை சாப்பிடலாமே என்றார் அவர்.
சபா, கோத்தா மாருடுவில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உட்பட, தனது அமைச்சின் கீழ் உள்ள மீன்வளத் துறைக்கு முள்ளம்பன்றி மீன் விஷம் தொடர்பான சில புகார்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சொன்னார்.
ஜோகூர், குளுவாங்கில் முள்ளம்பன்றி மீனை உட்கொண்ட முதியவர் உயிரிழந்தது குறித்து பேசுகையில் Dr ஜெஃப்ரி கிட்டிங்கான் அவ்வாறு கூறினார்.
முள்ளம்பன்றி மீன்களில் காணப்படும் tetrodotoxin எனப்படும் கொடிய நச்சு, நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதோடு உயிருக்கே ஆபத்தையும் ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.