
டென்வர், ஆகஸ்ட்-15- அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் அண்மையக் காலமாக தலையில் கொம்புகள் போன்ற சதை வளர்ச்சியுடன் முயல்கள் சுற்றித் திரியும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
தலை மற்றும் முகங்களில் கொம்புகள் போன்ற பாகங்களை அந்த காட்டு முயல்கள் கொண்டுள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு வினோதமாகவும், அதே சமயம் பரிதாபமாகவும் உள்ளது.
இந்நிலையில், ஷோப் பப்பிலோமா (shope papilloma) எனப்படும் கிருமியால் இந்த சதை வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
அவர்களுக்கு இது புதிதல்ல; காரணம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ‘கொம்பு’ போன்ற சதை வளர்ச்சியை அவர்கள் ஆராய்ச்சி செய்து வந்துள்ளனர்.
இந்த வைரஸ் பெரும்பாலும் தலை, காது, கண் இமை போன்ற இடங்களில் பரவி, கட்டிகள் உருவாகி கொம்புகள் போல் காட்சியளிக்கின்றன.
இது காட்டு முயல்கள் மத்தியில் மட்டும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
தலையில் ‘கொம்புகள்’ இருப்பதால், இந்த காட்டு முயல்கள் “Frankenstein bunnies”, “zombie rabbits” போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.