
கோலாலம்பூர், டிச 3 – கடந்த நவம்பர் மாதம்வரை B2 மலேசிய வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருந்த 4,225 பேர் B உரிமம் மாறுதல் சிறப்புத் திட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
மொத்தம் 5,477 பேர் B உரிமம் மாறுதல் திட்டத்திற்கான தேர்வில் அமர்ந்தனர். அவர்களில் 23 விழுக்காட்டினர் அதாவது 1,251 வேட்பாளர்கள் சோதனை செயல்பாட்டில் சிரமத்தை எதிர்நோக்கினர்.
நவம்பர் 27ஆம் தேதிவரை 245 மலேசிய வாகன பயிற்சி பள்ளிகளைச் சேர்ந்த 177 ஓட்டுநர் நிறுவனங்கள் (IM) இந்த மாற்றுத் திட்டத்தை வழங்குவதில் ஈடுபட்டதாக செனட்டர் டத்தோ அப்துல் ஹலிம் சுலைமானின் கேள்விக்கு பதிலளித்தபோது அந்தோனி லோக் கூறினார்.
ஓட்டுநர் உரிம மையங்களை நடத்துபவர்கள் சாலை போக்குவரத்து துறையிடம் அனுமதி பெறுவது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை செயல்படுத்த உறுதி செய்வதற்கான அமைச்சின் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
திட்டத்தை செயல்படுத்துவதை அமைச்சும் சாலை போக்குவரத்து துறையும் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு பொதுமக்களின் விண்ணப்பத்தை செயல்படுத்தத் தவறினால் அதற்கு பொறுப்பான தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தோனி லோக் கூறினார்.