
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – கடந்த ஜூலை 9 ஆம் தேதி, ஆஸ்திரேலியா சிட்னியில் மாரடைப்பு ஏற்பட்டு 5 நாட்கள் கோமாவில் இருந்த ஐமி நஸ்ருதீன், மலேசிய பாடகி டத்தோ ஸ்ரீ சித்தி நூர் ஹாலிசாவின் கானக் குரலை கேட்டபிறகு கோமாவிலிருந்து மீண்டெழுந்தார் எனும் செய்தி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது இந்த உணர்ச்சி மிகுந்த அனுபவத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, பல்வேறு நேர்மைறையான கருத்துக் குவியல்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளன.
சித்தி நூர் ஹலிசாவின் தீவிர ரசிகரான ஜமியை மீண்டும் எழ செய்வதற்கு அவரது தந்தை சித்தியை தொடர்புக் கொண்டு தனது மகனின் நிலைமையை விளக்கியுள்ளார்.
அடுத்த 1 மணி நேரத்திற்குள் சித்தி நூர் ஹாலிசாவிடமிருந்து வந்த அந்த குரல் பதிவை கேட்டவுடன் ஐமியின் உடலில் அசைவுகளைக் கண்டறிந்த மருத்துவர்கள் இது நேர்மறையான முன்னேற்றம் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
அந்த குரல் பதிவில், சித்தி நூர் ஹலிசா கோமாவில் இருக்கும் அந்த இளைஞரிடம், நீங்கள் கடவுளை நாடுங்கள், அவர் இதை கடந்து செல்ல உங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளைப் பேசியுள்ளார்.
தற்போது பாதுகாப்பாக மலேசியாவுக்குத் திரும்பிய ஐமி, மெல்ல குணமடைந்து வருகின்ற நிலையில் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் குறிப்பாக பாடகி சித்தி நூர் ஹாலிசாவிற்கும் தனது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.