
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-21 – இந்துக் கோவில்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்பார்வையிடவும் ஒழுங்குமுறைப் படுத்தவும், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவற்றையும் உள்ளடக்கி, இந்தியச் சமூக விவகாரங்களுக்குப் பொறுப்பேற்குமாறு கருவூல தலைமைச் செயலாளர் Datuk Johan Mahmood Merican வாயிலாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ரமணனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அது தொடர்பான அதிகாரப்பூர்வக் கடிதம் திங்கட்கிழமையன்று தமக்குக் கிடைக்கப் பெற்றதாக, பி.கே.ஆர் உதவித் தலைவரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் சொன்னார்.
அப்பொறுப்புத் தொடர்பில் விரைவில் பிரதமருடன் கலந்துபேசியப் பிறகு மேற்கொண்டு விவரங்களை வழங்குவதாக அவர் கூறினார்.
2023 டிசம்பரில் தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டதிலிருந்து, இந்தியத் தொழில்முனைவோர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ரமணன் பல்வேறு முன்னெடுப்புகளை அறிவித்து வருகிறார்.
Tekun Nasional வாயிலாக SPUMI மற்றும் SPUMI Goes Big திட்டங்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு, இந்தியப் பெண் தொழில்முனைவர்களுக்கான PENN திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட், பேங்க் ராக்யாட் வாயிலாக BRIEF-i திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட், SME Bank வாயிலாக வணிகம் திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
இது தவிர, I-BAP திட்டத்திற்கு 6 மில்லியன் ரிங்கிட், வழிபாட்டுத் தலங்களுக்கான நிதியுதவி, வணக்கம் மடானி திட்டம், இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான பக்தி மடானி திட்டம் போன்றவையும் உண்டு.