
கோலாலம்பூர், ஜனவரி 22 -நாட்டில் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கும் கோயில்களின் விவகாரங்களை இந்துக்களின் சமய நம்பிக்கையையும் அக்கோயில்கள் கட்டப்பட்ட காலக்கட்டத்தையும் புரிந்து கொண்டு அணுகுவதே சுமூகத் தீர்வுக்கு வித்திடும்.
இதுவே கோயில் விவகாரங்களை கையாளும்போது பெரிக்காத்தான் நேஷனல் எடுக்கக்கூடிய நிலைப்பாடு என பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கூறியுள்ளார். நில உரிமம் தொடர்பில் இந்து கோயில்கள் எதிர்நோக்கும் பிரச்சனையைதாம் ஜோகூர் மந்திரி பெசாராக இருந்த போதே சந்தித்துள்ளதோடு அதற்கான பின்னணியையும் அறிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்துக்கள் தொடக்கத்தில் மலாயா வந்த போது குறிப்பிட்டுச் சொல்ல முடியாத காலகட்டதிலேயே ஆலயங்களை எழுப்பியுள்ளனர். அப்போது அதற்கான தெளிவான வரையறைகள் இல்லை.
ஆக இப்போது நிலப்பட்டா பிரச்சனை வரும் போது அதுபோன்ற சரித்திர சூழலை கணக்கில் கொள்ளவேண்டும்.
இருக்கின்ற ஆயிரக்கணக்கான ஆலய பிரச்சனைகளயும் ஒரே நேரத்தில் ஒரு கோணத்தில் தீர்த்து விடமுடியாது. இது சிக்கல் மிகுந்தது.
தற்போதைக்கு இருக்கிற கோயில்களை அப்படியே விட்டுவிட்டு நிலப்பிரச்சனை எழுகின்ற போது மட்டும் அந்த கோயிலுக்கு எப்படிபட்ட மாற்று ஏற்பாடு தேவையோ அதனை சுமூகமாக அனைத்து தரப்பும் ஏற்ககூடிய வகையில் செய்ய வேண்டும் என்றார் .
நீண்டகால தீர்வாக சமய அமைப்புகள் மற்றும் சம்பந்தபட்ட தரப்பினர் அமர்ந்து அரசாங்கம் எப்படிப்பட்ட கொள்கைகளை வரைவது என்பது விவாதிக்கலாம் என்றார் முஹிடின்.
நேற்றைய இந்திய ஊடகவியலாளர்களுடான சந்திப்பின் போது அண்மையில் தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தின் போது‘kuil haram’ என சிலதரப்பினர் முத்திரை குத்தும் இயக்கத்தில் இறங்கிய நிலையில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் யாரும் ஏன் குரல் கொடுக்கவில்லை எனவும் வரும் காலத்தில் இது போன்ற பிரச்சனைகளுக்கு தங்களின் நிலைப்பாடு என்ன என கேட்க போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.



