Latestமலேசியா

கோலாலம்பூரில் புயல்; மரம் சாய்ந்து ஆடவர் பலி, பெண் காயம்

கோலாலம்பூர், அக்டோபர்-23,

 

நேற்று பிற்பகலில் தலைநகரைத் தாக்கிய இடியுடன் கூடிய மழையின் போது பல மரங்கள் வேரோடு சாய்ந்ததில் ஓர் ஆடவர் கொல்லப்பட்ட வேளை ஒரு பெண் காயமடைந்தார்.

 

தலைநகர் முழுவதும் பல இடங்களில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதைத் தொடர்ந்து, மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை பல அவசர அழைப்புகள் வந்ததாக, கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.

 

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு மற்றும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக விழுந்த மரங்களை வெட்டி அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

 

தாமான் டூத்தாவில் உள்ள பெர்சியாரான் டூத்தாமாஸில் ஹர்த்தாமாஸ் ரீஜென்சியில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில், மரம் விழுந்ததில் இரண்டு கார்கள் நசுங்கி 40 வயது ஆடவர் உயிரிழந்தார்.

 

அதே சமயம் கெப்போங் பாருவில் உள்ள ஜாலான் மெட்ரோ பிரிமாவில், 30 வயது பெண்ணின் வாகனத்தின் மீது விழுந்ததில் அவர் காயமடைந்தார்.

 

தாமான் புக்கிட் மலூரியிலும் கார் மீது மரம் விழுந்ததாக புகார் கிடைத்தது.

 

அனைத்து சம்பவங்களும் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் உடனடியாகக் கையாளப்பட்டு, நிலைமைக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 

வரும் நாட்களில் பாதகமான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் அத்துறை தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!