கோலாலம்பூர், நவ 4 – கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் திட்டம் ஜனவரியில் தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பண்டிகை காலங்கள், பொது விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு உத்தேச சாலை விரிவாக்கம் தீர்வாக அமையும் என பொதுப்பணித்துறை துணையமைச்சர் அகமட் மஸ்லான் (Ahmad Mazlan )
தெரிவித்தார். 2029ஆம் ஆண்டில் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி பூர்த்தியாகும் என பெரிக்காத்தான் நேசனல் குவந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரசாலி வான் நோர் ( Wan Razali Wan Nor ) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது அகமட் மஸ்லான் இத்தகவலை வெளியிட்டார்.
Ava Prime Berhad நிறுவனம் மேற்கொள்ளவிருக்கும் 45.3 கிலோமீட்டர் தூரம் கொண்ட 2.1 பில்லியன் ரிங்கிட் செலவில் அமையும் இத்திட்டம் கோம்பாக் டோல் சாவடியிலிருந்து பெந்தோங்வரை சாலை விரிவுபடுத்தப்படும். கோம்பாக் டோல் சாவடியிலிருந்து Genting Sempahவரை தற்போதைய மூன்று வழிச் சாலையை நான்காக உயர்த்தும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. நெஞ்சாலையின் மற்றொரு பகுதி இரண்டு பாதைகளில் இருந்து மூன்றாக அதிகரிக்கும். தற்போது கிழக்கு நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதையை ஒட்டி புதிய இருவழிச் சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் இதில் அடங்கும் என மஸ்லான் தெரிவித்தார்.