
மும்பை, அக்டோபர்-31,
இந்தியா,
மும்பையில் உள்ள ஒரு சிறிய படப்பிடிப்பு ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக 17 சிறுவர்களை அடைத்து வைத்த ஆடவரை, போலீஸார் encounter முறையில் சுட்டுக் கொன்றனர்.
இச்சம்பவம் மும்பை மாநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Web Series தொடரில் நடிப்பதற்கான நேர்முகத் தேர்வு என வெளியான செய்தியை உண்மையென நம்பி 17 குழந்தைகள் உட்பட 19 பேர் அங்கு சென்றிருந்த சமயத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அங்கிருந்த நபர் குழந்தைகளை ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக பிடித்துவைத்துக் கொண்டான்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் அவனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும், குழந்தைகளை விடுவிக்க அவன் மறுத்து விட்டான்.
மாறாக, குழந்தைகளை ஏதாவது செய்து விடுவேன் என்றும் கட்டடத்தை தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்றும் அவன் மிரட்டினான்.
இதனால், கழிவறை கதவை உடைத்து உள்ளே நுழைந்து அனைத்து குழந்தைகளையும் போலீஸ் பாதுகாப்பாக மீட்டது.
மீட்கப்பட்ட குழந்தைகள் 8 முதல் 15 வயதுக்குள் உள்ளவர்கள்.
அவர்களில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
மீட்புப் பணியின் போது சந்தேக நபர் போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது; போலீஸாரும் திருப்பி சுட்டதில் அவன் நெஞ்சுப் பகுதியில் காயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தான்.
விசாரணையில் ரோஹிட் ஆர்யா என அடையாளம் காணப்பட்ட அந்நபர், ஆசிரியராக பணிபுரிந்தவர் என தெரியவந்துள்ளது.
ஆர்யா, தனது சொந்த செலவில் நாக்பூரில் ஒரு தூய்மை பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டதாகவும், அதில் 70 லட்சம் ரூபாய் வரை செலவானதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாகக் கல்வித் துறை உறுதியளித்ததாகவும் ஆனால் தற்போது வரை அதனை வழங்கவில்லை என்றும் தெரியவந்தது.
இந்த அதிருப்தியில் தான் ரோஹித் குழந்தைகளைப் பிணைப் பிடித்தாரா அல்லது வேறு காரணங்கள் உண்டா என போலீஸ் மேற்கொண்டு விசாரிக்கிறது.



