கோவிட்-19 ‘பிறந்த’ இடம் என்ற கெட்டப் பெயரைப் போக்கப் போராடும் வூஹான்
வூஹான், ஜனவரி-20 – உலகையே ஆட்டிப் படைத்த கோவிட்-19 பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் தொடங்கி இவ்வாண்டுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன.
இத்தனை சீக்கிரம் காலங்கள் உருண்டோடினாலும், உலக மக்கள் வாழ்வில் அப்பெருந்தொற்று ஏற்படுத்திய வடுக்கள் அத்தனை எளிதில் மாறா.
இவ்வேளையில், கோவிட்-19 கிருமியின் ‘பிறப்பிடமாக’ உலக மக்களால் விமர்சிக்கப்படும் சீனாவின் வூஹான் நகரம், அந்த ‘அவப்பெயரிலிருந்து’ வெளியேற கடுமையாகக் போராடி வருகிறது.
அவ்வகையில், ஹுவானான் (Huanan) பட்டணத்தில் முன்பு கடல் உணவுகளின் மொத்தச் சந்தை இருந்த இடத்தில், மூடப்பட்டு விட்ட சந்தைக் கடைகளை மறைக்கும் வகையில் இள நீல நிறத்தில் மதில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன.
அந்தச் சந்தையிலிருந்து தான் 2019-ல் கோவிட் கிருமி முதன் முறையாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றியிருக்கலாமென அறிவியலாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
கோவிட் பரவல் கண்டறியப்பட்ட பிறகு 2020 ஜனவரி 23-ஆம் தேதி உலகின் முதல் quarantine எனப்படும் தனிமைப்படுத்தலை செயல்படுத்திய மருத்துவமனையும், இப்புதிய மதில் சுவர்களால் மறைக்கப்பட்டுள்ளது.
அம்மருத்துவமனை ஏற்கனவே கைவிடப்பட்ட நிலையில், அங்கு கோவிட் பற்றி யாரும் பேசவேக் கூடாது என்றும் அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர்.
இந்த வூஹான் நகரில், இதே ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கோவிட் நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன; 76 நாட்கள் நீடித்த உலகின் முதல் MCO எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
இன்று, பரபரப்பான போக்குவரத்துடன் வூஹான் மாவட்டம் பழைய உத்வேகத்திற்குத் திரும்பியுள்ளது.