
கோலாலாம்பூர், ஜூலை-23- வரும் சனிக்கிழமை எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ அமைதிப் பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது.
தலைநகருக்குள் நுழையும் சாலைகளில் அன்றைய தினம் நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், சாலைகளை மூடும் எண்ணமில்லை.
என்றாலும், கண்காணிப்பும் ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்படுமென, கோலாலாம்பூர் போலீஸ் இடைக்கால தலைவர் மொஹமட் உசுஃப் ஜான் மொஹமட் (Mohamed Usuf Jan Mohamad) தெரிவித்தார்.
இவ்வேளையில், 300,000 பங்கேற்பாளர்கள் திரள்வர் என ஏற்பாட்டாளர்கள் கூறிக் கொண்டாலும், தங்களின் கணிப்பின் படி 10,000 முதல் 15,000 பேர் வரையில் தான் கூடுவார்கள் என அவர் சொன்னார்.
பேரணி பங்கேற்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்; கூர்மையான அல்லது அபாயகரமான பொருட்களோ, பட்டாசுகளோ கொண்டு வரக்கூடாது; அதே சமயம் 3R நிந்தனை அம்சங்களைத் தாங்கிய பதாகைகளுக்கும் அனுமதியில்லை.
குழந்தைகளைக் கொண்டு வரக்கூடாது என்பதோடு, பாதுகாப்புப் படையினரின் கட்டளைகளை மீறுவதும் கலவரத்தில் ஈடுபடுவதும் கூடாது.
அவதூறு பரப்பும் வகையிலான பேச்சுக்களும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டுமென, உசுஃப் நினைவுறுத்தினார்.
விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலகக் கோரி எதிர்கட்சிகள் தலைமையில் நடைபெறும் அப்பேரணியில், அரசு சாரா இயக்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Masjid Negara, Pasar Seni, Masjid Jamek Sultan Abdul Samad, Masjid Jamek Kampung Baru, Kompleks SOGO ஆகிய 5 இடங்களில் ஒன்றுகூடி, அங்கிருந்து Dataran Merdeka-வுக்கு அவர்கள் ஊர்வலமாகச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.