பியூஃபோர்ட், டிசம்பர்-24 – சபா, பியூஃபோர்ட்டில் (Beaufort) 7 மீட்டர் உயர டுரியான் மரத்தில் சிக்கிக் கொண்ட ட்ரோனை எடுக்க மரமேறிய ஆடவர், அரைமணி நேரத்திற்கும் கூடுதலாக மேலேயே பரிதவித்தார்.
கம்போங் பத்தாண்டோக் லூபாக்கில் நேற்று மாலை 5.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
மரத்திலேறிய 36 வயது ஆடவரின் மூக்குக் கண்ணாடி தவறி கீழே விழுந்து விட்டதால், பார்வை சற்று மங்கலாகி அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.
நல்ல வேளையாக கீழே நின்றிருந்த மனைவி உடனடியாகத் தீயணைப்பு-மீட்புத் துறைக்கு அழைத்து உதவிக் கோரினார்.
சம்பவம் இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புத் துறையின் 6 வீரர்கள், நீண்ட ஏணி மற்றும் கயிறைக் கொண்டுஅவ்வாடவரை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
மருத்துவக் குழு அந்நபருக்கு தொடக்கக் கட்ட சிகிச்சைகளை வழங்கி, அவர் சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.