
கோலாலாம்பூர், ஜூலை-23- சர்ச்சைக்குரிய சமய போதகர்களான சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங், ரிட்டுவான் தீ அப்துல்லா ஆகியோருக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது பெருத்த ஏமாற்றமாகும்.
அதற்கு ஆதாரங்கள் போதவில்லை எனக் கூறப்பட்ட காரணம் அதைவிட மோசமாகுமென, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் சாடியுள்ளார்.
வீடியோ பதிவுகள், சமூக ஊடகப் பதிவுகள் உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி பலதரப்பட்ட மலேசியர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான புகார்கள் பெறப்பட்டும், ஆதாரங்கள் போதவில்லை என சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் கை விரிப்பது ஏற்புடையதல்ல.
இந்நாட்டில் சிறுபான்மையினரின் உணர்ச்சிகளை சீண்டும் வகையிலும், மனதை புண்படுத்தும் வகையிலும் நடந்துகொள்பவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்; இதுவே மற்றவர்களுக்கு என்றால், அதிரடி கைது நடக்கிறது.
உண்மையில், இது மக்களுக்கு ஆபத்தான செய்தியை சொல்கிறது என கணபதிராவ் கவலைத் தெரிவித்தார்.
சட்ட அமுலாக்கத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது; அதுவும் மலேசியா போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் நீதியை நிலைநாட்டுவதில் இந்த பாகுபாடே வரக்கூடாது.
எனவே, மேற்கண்ட 3 நபர்களுக்கு எதிராக செய்யப்பட்ட அனைத்து புகார்களையும் ஆதாரங்களையும் எந்தவொரு பயமோ அல்லது கரிசனமோ இல்லாமல் சட்டத் துறைத் தலைவர் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
அனைத்து டிஜிட்டல் பதிவுகளையும், பொது அறிக்கைகளையும் வெளிப்படையாகவும் விரிவாகவும் சேகரித்து சட்ட மறுஆய்வுக்கு, போலீஸ் அனுப்பி வைக்க வேண்டும்.
அதே சமயம், இத்தனைத் தெளிவான ஆதாரங்கள் இருந்தும் அவை ‘போதவில்லை’ என்ற முடிவுக்கு சட்டத் துறை அலுவலகம் வந்த காரணம் குறித்து அமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும் என கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.
இது அரசியல் பற்றியது அல்ல; மாறாக நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நமது பன்முக சமூகத்தின் பாதுகாப்பு பற்றியது; வெறுப்புப் பேச்சை நாம் ஒருபோதும் இயல்பாக்கவோ அல்லது மத சீண்டல்கள் செய்பவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதையோ நாம் அனுமதிக்கக் கூடாது.
சட்டத்தின் கீழ் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் அமைதியாக வாழ விரும்பும் அனைத்து மலேசியர்களுடனும் தாம் துணை நிற்பதாகக் கூறிய கணபதிராவ், இவ்விஷயத்தில் நீதி நிலைநாட்டப்படும் வரை நாடாளுமன்றத்திலும், தொடர்புடைய அதிகாரிகளிடத்திலும் குரல் கொடுப்பேன் என்றார்.