
கோலாலம்பூர், ஜூலை-22- 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களுக்கு எதிரான நிந்தனை அம்சங்களுக்கு எதிரான அமுலாக்க நடவடிக்கைகள், ஒரு சார்பாக இல்லாமல் அனைத்து மலேசியர்களுக்கும் உரித்தானதாக இருக்க வேண்டும்.
அதை விடுத்து ஒரு சாராருக்கு கேடயமாகவும் மறு சாராருக்கு வாளாகவும் அது பயன்படுத்தப்படக் கூடாது என, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நினைவுறுத்தினார்.
சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க போதிய ஆதாரங்கள் இல்லையென, பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சாய்ட் அறிவித்திருப்பது குறித்து விக்னேஸ்வரன் அவ்வாறு கருத்துரைத்தார்.
மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய இடமாற்றம் குறித்து பேசியப் பேச்சுக்காக நாடு முழுவதும் சம்ரி வினோத் மீது 900 புகார்கள் செய்யப்பட்டன.
இத்தனை பேர் புகார் செய்துமா சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு ஆதாரம் போதவில்லை? என விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
இது போன்ற முடிவுகள், மலேசியாவில் சட்ட அமுலாக்கத்தின் நெறிமுறைகள் குறித்து கேள்வி எழுப்புவதோடு, அதில் காணப்படும் முரண்பாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
3R சட்டமானது குறிப்பிட்ட ஓர் இனத்துக்கோ மதத்துக்கோ மட்டும் அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக, அனைத்து மலேசியர்களையும் பாதுகாக்க அறிமுகப்படுத்தப்பட்டது.
எனவே குறிப்பிட்ட ஓர் இனமோ மதமோ பாதிக்கப்படும் போது நடவடிக்கை எடுப்பதில் காட்டப்படும் வேகம், அதுவே மற்றவர்களுக்கு நடக்கும் போது காணாமல் போவதை ஏற்க முடியாது.
சட்ட நடவடிக்கை என்பது ஒருவரை தண்டிப்பது மட்டுமல்ல; மாறாக சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற செய்தியை தெளிவாக எடுத்துரைப்பதற்கும் ஆகும்.
எனவே, வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல், சட்ட அமுலாக்கத்தை அனைத்து மலேசியர்களுக்கும் ஒரே விதமாக பயன்படுத்துமாறு, அரசாங்கத்தையும் அமுலாக்கத் தரப்பையும் வலியுறுத்துவதாக, இன்று வெளியிட்ட அறிக்கையில் விக்னேஸ்வரன் கூறினார்.