
கோலாலாம்பூர், ஜூலை—23- சர்ச்சைக்குரிய 2 சமய போதகர்களான சம்ரி வினோத் மற்றும் ஃபிர்டாவுஸ் வோங் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போதிய ஆதாரங்கள் இல்லையென்பது, வெறும் சாக்கு போக்கே!
மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அவ்வாறு சாடியுள்ளார்.
சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சாய்ட்டின் (Datuk Seri Azalina Othman Said) அவ்வறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
“ஆதாரங்கள் போதவில்லை” என்ற காரணமெல்லாம், உணர்ச்சிப்பூர்வமான விஷங்களை உரிய வகையில் கையாளாமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயலாகும்; இது பல்லின – மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைத்து விடுமென, கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காலவருமான அவர் சுட்டிக் காட்டினார்.
சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் இருவருக்கும் எதிராக செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான போலீஸ் புகார்கள், வீடியோ பதிவுகள், சமூக ஊடகப் பதிவுகள் போன்றவை கற்பனைக் கதைகள் அல்ல; எனவே ஆதாரங்கள் போதவில்லை என்பது கேட்பதற்கே மிகவும் வேடிக்கையாக உள்ளது என சிவகுமார் சொன்னார்.
இந்த விஷயத்தை கண்டித்து ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உடனடியாக அறிக்கை வெளியிட்டிருப்பதையும் சிவகுமார் பாராட்டினார்.
துணிச்சலோடு குறைகளை விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியுள்ளார்; ஆனால் அதே தைரியம் அரசாங்கத்தில் உள்ள மற்ற தலைவர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இல்லை.
இனம் – மதம் சார்ந்த விஷயங்களில் நமக்கு அநீதி ஏற்படும் போது மௌனம் காப்பது தலைவர்களுக்கு அழகல்ல என சிவகுமார் நினைவுறுத்தினார்.
எனவே, தேசிய நல்லிணக்கம் சார்ந்த விஷயங்களைக் கையாளும் போது அரசாங்கம் வெளிப்படையாகவும், பொறுப்போடும், நடந்துகொள்ள வேண்டும்; அதை விட முக்கியமாக வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இன்றி அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.
இல்லையென்றால் ‘மலேசியா மடானி’ என்பது செயலில் இல்லாத சுலோகமாகவே பார்க்கப்படும் என சிவகுமார் தெரிவித்தார்.