
கோலாலம்பூர், மார்ச்-11 – ஆபாசம், உணர்ச்சிப்பூர்வ விஷயங்கள் மற்றும் 3R நிந்தனை அம்சங்களைக் கொண்டுள்ள கருத்துக்களை கண்காணித்து நீக்கிட, AI உதவியுடன் ஒரு செயலி உருவாக்கப்பட வேண்டும்.
மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என்.சிவகுமார் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடுபவர்கள் மட்டுமின்றி, அவற்றுக்கு பதிலளிக்கிறோம் என்ற பெயரில் மோசமான கருத்துகளைப் பதிவிடுபவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடும் இடத்தில் பலர் தங்களின் இஷ்டத்துக்கு எல்லை மீறிய கருத்துகளைப் பதிவுச் செய்கின்றனர்.
அவர்களும் தப்பிக்க முடியாது என தேசியப் போலீஸ் படைத் தலைவரே எச்சரித்துள்ளார்.
ஆக, Keyboard Warriors அதாவது விசைப்பலகை போராளிகளாக இருப்போர், எல்லை மீறிய தத்தம் செயல்களுக்கு தக்கத் தண்டனையைப் பெறவும் தயாராக இருக்க வேண்டும் என, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான சிவகுமார் சொன்னார்.
இவ்வேளையில், 3R அம்சங்கள் தொடர்பான நிந்தனைச் செயல்கள் குறித்து பொது மக்கள் எளிதில் புகாரளிக்க ஏதுவாக, போலீஸும் MCMC-யும் செயலியை உருவாக்க வேண்டும்.
எல்லா நேரமும் மக்களின் கையடக்கத்திலிருக்கும் அந்த கைப்பேசி செயலியின் உதவியுடன், 3R நிந்தனை சம்பவங்களை விவேகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் கையாள முடியுமென சிவகுமார் சொன்னார்.
3R விஷயங்களில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்; மன்னிப்பது மனிதர்களின் குணமென்றாலும், தக்க படிப்பினையாக அமைய நடவடிக்கைகளும் முக்கியம்.
ஆகவே, ஏரா வானொலி அறிவிப்பாளர்கள், ஓர் இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர், இஸ்லாத்தை இழிவுப்படுத்திய ஆடவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டத்திற்குப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதே சமயம் இவ்விவகாரத்தில் தண்டனையளிப்பு மட்டுமே பிரச்னைக்குத் தீர்வல்ல; தடுப்பு நடவடிக்கைகள் முக்கியம் என அவர் மீண்டும் சுட்டிக் காட்டினார்.