
கோலாலாம்பூர், ஜூலை-17- நாட்டில் தற்போது நிலவும் வெப்ப நிலை சாதாரண ஒன்றே.
சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 36 பாகை செல்சியஸைத் தொடக்கூடும் என்றாலும், அது இன்னும் அசாதாரண வெப்ப அலையை எட்டவில்லை என மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia கூறியுள்ளது.
இந்த வெப்ப நிலை இம்மாத இறுதி வரை நீடிக்கலாம் என, அத்துறையின் தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip தெரிவித்தார்.
இந்நிலையில், பிலிப்பின்ஸ் அருகே மேற்கு பசிஃபிக் பெருங்கடலில் வெப்பமண்டல புயல் உருவானதைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இலேசான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் தீவிர வெப்பம் நாட்டைத் தாக்காது என்றே எதிர்பார்க்கப்படுவதாகவும் Hisham கூறினார்.
மேற்கு பசிஃபிக் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலை மையமிட்டுள்ள வெப்பமண்டல சூறாவளிகளின் தாக்கம், மலேசியாவில் மழைப்பொழிவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, வறண்ட மற்றும் மழைக் குறைவாக உள்ளதாக கூறப்பட்டாலும், தீபகற்பத்தின் வட பகுதிகளில், குறிப்பாக பேராக்கின் Kerian-னில் செயற்கை மழையைப் பொழிய வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்னும் பொருத்தமான நேரம் அமையவில்லை என்றார் அவர்.
வெப்ப நிலையால் Kolam Bukit Merah ஏரியில் தண்ணீர் வற்றி, நெல்வயல்கள் வறண்டு போயிருப்பதால், அங்கு செயற்கை மழையைப் பொழிய வைக்க மே விதைப்பு மேற்கொள்ளப்படுமென, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு முன்னதாகக் கூறியிருந்தார்.