
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-21 – பினாங்கில், 3 பெண்கள் 1 ஆண் மற்றும் 7 பிள்ளைகளை உட்படுத்திய ஒரு குடும்பம் ஒரு தொழிற்சாலையின் மேல் மாடியில் 2 மாதங்களாக குடியிருந்து வருகிறது.
சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத அவர்களின் அவல நிலை ஒரு நண்பர் மூலமாக, வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூவின் கவனத்துக்கு வந்தது.
இந்நிலையில் அவர்கள் அங்குத் தங்கியிருப்பது இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி, அவர்களை வெளியேறுமாறு தொழிற்சாலை உரிமையாளர் வற்புறுத்தியுளார்.
இதனால் எங்கு போவது என்று தெரியாமல் பரிதவித்த அக்குடும்பத்துக்கு, டத்தோ ஸ்ரீ சுந்தர ராஜூ முயற்சியில் தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.
முன்னதாக சாப்பாட்டுத் தேவைகளுக்கு 500 ரிங்கிட் பணத்தைக் கொடுத்துதவியவர், தங்குவதற்கும் சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளார்.
அவ்வகையில், பக்கத்திலேயே 2 அறைகளைக் கொண்ட ஓர் அடுக்குமாடி வீடு, sewa beli கொள்கை அடிப்படையில் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்கான 1,300 ரிங்கிட் முன் பணத்தையும் அவரே கட்டி விட்டார்.
வீட்டு சாவி இன்று வெள்ளிக் கிழமை வழங்கப்படுகிறது.
மாதா மாதம் 120 ரிங்கிட் வாடகையைக் கட்டி வந்தால் 15 வருடங்களில் வீடு அவர்களுக்குச் சொந்தமாகி விடும்.
கல்வித் தடைபட்டுள்ள அந்த 7 மாணவர்களையும் சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளியில் சேர்க்கவும் ஏற்பாட்டைச் செய்திருப்பதாக டத்தோ ஸ்ரீ சுந்தர ராஜூ தெரிவித்தார்.
உதவிக் கிடைத்த அக்குடும்பம், ஒரு தந்தை போல இருந்து டத்தோ ஸ்ரீ சுந்தர ராஜு பரிவுக் காட்டியதாக நெகிழ்ந்தது.