
ஜோகூர் பாரு, ஆக 12 – பாசிர் கூடாங்,தாமான் புக்கிட் டாலியாவில் உள்ள போக்குவரத்து விளக்குகள் அருகே சாலையோரத்தில் பிரசவவலி ஏற்பட்ட ஒரு இளம் தாய்க்கு ஒரு மலாய்க்கார பெண், ஒரு இந்திய பெண் மற்றும் மேலும் இருவர் மனிதாபிமான வகையில் செய்த உதவி டிக்டோக்கில் வைரலாகியுள்ளது.
சபாவைச் சேர்ந்ததாக நம்பப்படும் அந்தப் பெண்ணுக்கு, தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பிரசவ வலி ஏற்பட, அவர் சாலை ஓரத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.
இதனை நேரில் கண்ட அம்மாலாய் மற்றும் இந்திய மாது இவரும் தூறிக்கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் அந்த இளம் தாய் பிரசவிக்க உதவியதோடு குழந்தையை வெற்றிகரமாக பிரசவித்தனர்.
பொதுமக்களின் பார்வையைத் தவிர்க்க குடைகளை பயன்படுத்தி தடுப்பை போட்டதோடு, வேறு வழியின்றி சிசுவின் தொப்புள் கொடியை உணவு விநியோகிக்கும் ஒருவரின் காலணியின் கயிற்றைக் கொண்டு கட்டியுள்ளனர்.
பின்னர் பிரசவித்த இளம் தாயும் அவரது குழந்தையும் ஆம்புலன்ஸ் வண்டியின் உதவியோடு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் இணையத்தில் வைரலாக பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
தற்போது அந்த தாயும் குழந்தையும் ஜோகூர் பாரு சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.