கோலாலம்பூர், டிசம்பர்-13, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனைய தங்கும் அறையிலிருந்த திரைச்சீலைக்கு, நேற்று ஆஸ்திரேலியர் ஒருவர் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து 33 வயது அவ்வாடவர் கைதுச் செய்யப்பட்டார்.
முன்னதாக சிகரெட்டுக்கான தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், விமான நிலைய அதிகாரிகளை நோக்கி அந்நபர் வாய்மொழியாக மூர்க்கத்தனம் காட்டினார்;
இதனால் அதிகாலை 2.15 மணியளவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அப்போது ஆக்ரோஷமான அந்நபர், அறையிலிருந்த திரைச்சீலைகளை அகற்றி lighter-ரைப் பயன்படுத்தி அவற்றை எரித்தார்.
தான் கேட்ட சிகரெட்டைத் தராவிட்டால் இன்னும் தீ வைப்பேன் என்றும் மிரட்டினார்.
எனினும், விமான நிலைய போலீஸ் அதிகாரிகள் விரைந்து தீயை அணைத்தனர்;
அதன் போது, தீ அணைப்பான் கருவியைக் கைப்பற்றிய அவ்வாடவர், போலீஸ் அதிகாரிகள் மீது புகையைத் தெளித்து விட்டார்.
இன்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் அந்நபருக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டுகள் வரையில் சிறைத்தண்டனை கிடைக்கலாம்.