கோலாலம்பூர், டிசம்பர்-11 – சிங்கப்பூருக்கு மலேசியா விற்கும் Renewable Energy எனப்படும் புதுப்பிக்கப்படும் ஆற்றலானது, நாட்டின் உபரி கையிருப்பாகும்.
நாட்டில் தற்சமயம் பயன்படுத்தப்படாமலிருக்கும் அதிகப்படியான பசுமை மின்சாரக் கையிருப்பே அதுவென, எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சின் துணையமைச்சர் அக்மால் நஸ்ருல்லா நாசிர் கூறினார்.
இன்றைய மக்களவைக் கூட்டத்தின் போது எதிர்கட்சியைச் சேர்ந்த குபாங் கெரியான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் (Datuk Seri Tuan Ibrahim Tuan Man), சிங்கப்பூருக்கு மலேசியா புதுப்பிக்கப்படும் ஆற்றலை விற்பது குறித்து ஐயம் தெரிவித்தார்.
2050-குள் கரியமில வாயு உமிழ்வு இல்லாத நாடாக உருமாறும் மலேசியாவின் இலக்குக் குறித்தும் அவர் கவலைத் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த அக்மால் நஸ்ருல்லா, பசுமை மின்சாரப் பயன்பாட்டுக்கு மாறுமாறு நாட்டில் மேலும் ஏராளமான நிறுவனங்களை அரசாங்கம் ஊக்குவித்து வருவதாகவும் கூறினார்.
நாட்டின் மின்சார விநியோகத்தில், நடப்பில் 28 விழுக்காடாக உள்ள பசுமை மின்சாரக் கலவையை, 2025-ஆம் ஆண்டில் 31 விழுக்காடாகவும், 2035-ல் 40 விழுக்காடாவும், 2050 வாக்கில் 70 விழுக்காடாகவும் படிப்படியாய உயத்த அரசாங்கம் எண்ணம் கொண்டிருப்பதாக துணையமைச்சர் சொன்னார்.