
டொரோண்டோ, மார்ச்-29- தமிழினப் படுகொலை விழிப்புணர்வு வாரம் தொடர்பான சட்டத்திற்கு எதிராக இலங்கைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த வழக்கை, கனடா நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கனடாவின் ஒன்தாரியோ (Ontario) மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அதனைத் தெரிவித்தார்.
இந்தச் சட்டம் ஒவ்வோர் ஆண்டும் மே 18-ஆம் தேதியை ஒன்தாரியோவில் தமிழ் இனப்படுகொலை நாளாக நினைவுக் கூறுகிறது.
2009-ஆம் ஆண்டு இலங்கை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிக் கட்டங்களில் கொத்துக் கொத்தாய் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களை அத்தேதி நினைவுக் கூறுகிறது.
2021-ஆம் ஆண்டு ஒன்தாரியோ சட்டமன்றத்தில் இந்த சட்டம் 104 நிறைவேற்றப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த சிங்கள அமைப்புகள் அச்சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி வழக்குத் தொடுத்தன.
ஆனால், அம்முயற்சி கீழ்நிலை முதல் மேல்நிலை நீதிமன்றம் வரை தோற்கடிக்கப்பட்ட நிலையில், தற்போது கனடிய உச்சநீதிமன்றமே அவ்வழக்கை தள்ளுபடிச் செய்துள்ளது.
இது கனடா மட்டுமின்றி உலகத் தமிழர்களுக்கே கிடைத்த வெற்றியாகுமென விஜய் தணிகாசலம் வருணித்தார்.
கனடிய உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுப்பூர்வ தீர்ப்பானது, இழந்த அப்பாவி உயிர்களை அங்கீகரிப்பதோடு, தமிழ் இனப்படுகொலையின் நீதிக்கான உலகலாய முயற்சியில் ஒரு மைல் கல்லாக செயல்படும் என்றார் அவர்.
இந்நிலையில் அச்சட்டத்தைப் பாதுகாக்க உறுதுணையாக நின்ற மாவட்ட முதல்வர், சட்டமன்ற சகாக்கள், 60-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், தமிழ் மக்கள் குறிப்பாக இளையோருக்கு விஜய் நன்றித் தெரிவித்துக் கொண்டார்