
சிட்னி, ஜனவரி 23 – ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் நடைபெற்ற எல்லைச் சோதனையின் போது, 26 வயதுடைய மலேசிய ஆடவனின் கைப்பேசியில் குழந்தை பாலியல் வன்முறை தொடர்புடைய படங்கள் இருந்ததால் அவன் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டான்.
ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்ட தகவலின்படி, அந்த நபரின் கைப்பேசியில் 100-க்கும் அதிகமான படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் anime மற்றும் செயற்கை நுண்ணறிவு அதாவது AI மூலம் உருவாக்கப்பட்ட படங்களும் இருந்ததாக கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞன் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டான்.
ஜனவரி 1 முதல் 14 வரை, ஆஸ்திரேலியா முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில், மின்னணு சாதனங்களில் குழந்தை பாலியல் வன்முறை பதிவுகள் இருந்ததால், 17 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிட்னி வந்தவுடன் மேற்கொள்ளப்பட்ட மின்னணு சாதனச் சோதனைக்கு பின்னர், அந்த மலேசிய இளைஞனின் விசா ரத்து செய்யப்பட்டு, நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



