
புத்ராஜெயா, ஏப்ரல்-14, இன்று சித்திரைப் புத்தாண்டு, வைசாகி மற்றும் விஷு புத்தாண்டைக் கொண்டாடும் மலேசியா வாழ் தமிழ், சீக்கிய, மலையாளி அன்பர்களுக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பினைக் கொண்டு வரட்டும் என்றார் அவர்.
நாம் பன்முகத்தன்மையைப் பெருமையுடன் கொண்டாடுகிறோம்.
இதுவே நமது நாட்டைத் தனித்துவமாகவும் வலிமையாகவும் காட்டுகின்றது.
எனவே, நாட்டு மக்கள் பரஸ்பர ஒற்றுமை உணர்வைத் தொடர வேண்டும்; அதுவே நமது உண்மையான பலமென டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
வணிக நிதியுதவி உட்பட இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும்.
அதேபோல் கல்வி, வழிபாட்டுத் தலங்கள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய அம்சங்களையும் அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும்.
இது நாட்டில் உள்ள இந்தியச் சமூகத்தினரின் எதிர்காலத் தேவைக்கு மிகவும் முக்கியமானதாகவும் அமையுமென, facebook-கில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கூறினார்.