கோலாலம்பூர், அக்டோபர்-20, இந்நாட்டு இந்தியச் சமூகம் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட தலைமுறையை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
சிந்தனையாற்றல் மிக்க சமூகம் எந்தவித சவால்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொள்ளுமென, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
அதே சமயம் சிறந்த தலைமைத்துவம் இல்லாத ஓர் இனமோ, இயக்கமோ, இராணுவமோ, தானாகவே அழிந்துபோகும்.
மற்றவர்கள் அழிக்க வேண்டியதில்லை என்றார் அவர்.
தலைவர்களுக்கும் தலைமைத்துவத்திற்கும் வித்தியாசமிருப்பதாக, நாடறிந்த வழக்கறிஞர் எம்.மதியழகனின் ‘எண்ணங்கள் வண்ணங்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய போது டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.
தாம் குறிப்பிட்ட சிந்தனையாற்றல் ‘எண்ணங்கள் வண்ணங்கள்’ நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
ஒரு தலைமுறையின் சிந்தனை மாற்றத்திற்கான அனைத்து அம்சங்களும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன.
மிகவும் சரியான நேரத்தில் அந்நூலை வெளியிட்டமைக்காக நூலாசிரியர் மதியழகனை, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணன் பாராட்டினார்.
மலேசிய பாரதி தமிழ் மன்றம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், ஷா ஆலாம் தமிழர் சங்கம் ஆதரவில் கொம்ப்ளெக்ஸ் மலூரியில் நடைபெற்ற அந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு டத்தோ பி.சகாதேவன் தலைமை வகிக்க, டத்தோ ஏ.சோதிநாதன் முன்னிலை வகித்தார்.
பிரமுகர்கள், தமிழறிஞர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், பொது மக்கள் என சுமார் 100 பேர் அந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்.