சிரம்பான், நவ 29 – தனது காதலியான இளம் பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக கல்லூரி மாணவன் ஒருவனுக்கு சிறைத் தண்டனைக்கு பதிலாக 240 மணி நேரம் சமூக சேவை செய்யும்படி செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. 20 வயதுடைய Ronaldo Silo Chundi என்ற அந்த மாணவனுக்கு கற்பழிப்பு குற்றத்திற்கான சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி வழங்குவது பொருத்தமானதாக இல்லையென நீதிபதி டத்தின் சுரிதா புடின்
(Surita Budin ) தீர்ப்பளித்தார். ரொனால்டோ சமூக சேவையை முடிக்கத் தவறினால், குற்றச்சாட்டை எதிர்கொள்ள மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படும் வகையில் குற்றஞ்சாட்டப்படலாம் என நீதிபதி தெரிவித்தார்.
அதோடு மாதந்தோறும் முதல் தேதியன்று அருகேயுள்ள போலீஸ் நிலையத்திற்கு ரொனல்டோ ஆஜராக வேண்டும் என்பதோடு சமூக நலத்துறை அதிகாரி நிர்ணயிக்கும் நடவடிக்கை மற்றும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும் அந்த மாணவனுக்கு தனிநபர் உத்தரவாதத்தோடு 5,000 ரிங்கிட் நன்னடத்தை ஜாமின் விதிக்கப்பட்டது. அந்த தொகையை செலுத்தத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.