
புக்கிட் ஜாலில், அக்டோபர்-27, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ். ஜி தலைமையில் சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரங்கள் பாடும் திறன் போட்டி நான்காவது ஆண்டாக சிறப்பாக நடந்தேறியது.
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கின் கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்று வரும் தீபாவளிச் சந்தையில், நேற்றிரவு அதன் இறுதிச் சுற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
அதில் விஜயபிரகாஸ் மாறன் வாகை சூடி 2,000 ரிங்கிட் பரிசுப் பணத்தைத் தட்டிச் சென்றார்.
இரண்டாமிடத்தைப் பிடித்த தோகையன் எம்.செல்வன் 1,500 ரிங்கிட்டையும், மூன்றாவது இடத்தில் வந்த நிஷாந்தினி நித்யஸ்ரீ நேசன் 1,000 ரிங்கிட்டையும் பரிசாக வென்றனர்.
ரொக்கப் பரிசோடு, நற்சான்றிதழும் கேடயங்களும் வழங்கப்பட்டன.
வெற்றிப் பெற்றவர்கள் தங்களின் திறனை மென்மேலும் மெருகேற்றிக் கொள்ள உதவும் வகையில் ‘பயணம் தொடரும்’ என்ற பெயரில் உரியப் பயிற்சிகளும் மேடை வாய்ப்புகளும் கிடைக்கவும் ஏற்பாட்டுக் குழு சீரிய முயற்சி எடுத்துள்ளது.
இறுதிச் சுற்றின் நீதிபதிகளாக ஆஸ்ட்ரோ புகழ் ஆனந்தா, மூத்த பாடகி டத்தோ சுசிலா மேனன், பிரீத்தா பிரசாத் ஆகியோர் பணியாற்றினர்.
9 முதல் 15 வயதிலான சிறார்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் இம்முறை முதல் 10 பேரில் சிறப்புக் குழந்தையான ஒரு சிறுவனும் இடம் பிடித்தது பெருமையாகும்.
திறமைகளை வெளிக்கொணர இது போன்ற வாய்ப்புகளும் மேடைகளும் வழங்கப்பட்டால் தான், இலைமறைக் காயாக உள்ள நமது குழந்தைகளின் திறமை வெளிப்படும் என Dr குணராஜ் தெரிவித்தார்.
நான்காண்டுகளாக கிடைத்து வரும் மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து, இப்போட்டி அடுத்தாண்டு புதிய பரிமாணத்தைக் காணவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
இந்த மாபெரும் இறுதிச் சுற்று சிறப்பாக நடைபெற உதவிய Agenda Suria-வுக்கும், உள்ளூர் கலைஞர்கள் அமைப்பான கலைக்குடும்பம் மற்றும் விண்வெளி கலை கலாச்சார மன்றத்துக்கும் Dr குணராஜ். ஜி நன்றித் தெரிவித்துக் கொண்டார்.