
கோலாலம்பூர், ஜனவரி-22,வட்டி முதலைகளிடம் கடன் வாங்கிய ஆடவர் மரணமடைந்த பிறகு, அவரின் குடும்பத்தை அக்கும்பல் விடாமல் துன்புறுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த வட்டி முதலையிடம் தினசரி செலவுக்காக அவ்வாடவர் 1,648 ரிங்கிட்டை வட்டிக்கு வாங்கியுள்ளார்.
வட்டிக்கு வாங்கியப் பணத்தைக் கட்ட வில்லையென்றால், மகனை உயிரோடு பார்க்க மாட்டீர்கள் என அக்கும்பல் மிரட்டியிருக்கிறது;
இந்நிலையில், சில தினங்களிலேயே அதாவது டிசம்பர் 21-ஆம் தேதி ஜோகூர் பாருவில் உள்ள கட்டடமொன்றிலிருந்து விழுந்து 27 வயது அவ்விளைஞர் உயிரிழந்தார்.
மகனை இழந்த சோகத்தில் குடும்பமே வாடிப் போயிருக்கும் நிலையிலும் கூட, வட்டி முதலை கும்பல் கொஞ்சமும் மனிதாபிமானமின்றி அக்குடும்பத்திற்குத் தொல்லை கொடுத்து வருகிறது.
ஆகக் கடைசியாக, அவர்களின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
வட்டி முதலைகள் கூலிக்கு வைத்த ஆள், சர்வ சாதாரணமாக அவ்வீட்டை நெருங்கி பெட்ரோல் குண்டை வீசி விட்டு, சற்று தூரம் சென்றதும் அங்கிருந்து புகைப்படம் எடுக்கும் காட்சிகளும் வைரலாகியுள்ளன.
மகன் வட்டிக்குப் பணம் வாங்கியது ஒரு கும்பலிடம் தான்; ஆனால் தங்களிடமும் வட்டிக்கு வாங்கியதாக பல்வேறு கும்பல்கள் தொடர்ந்து நச்சரித்து வருகின்றன; அதற்கு ஆதாரம் கேட்டால் அவர்களிடம் பதில் இல்லையென, இறந்து போன ஆடவரின் தந்தை கூறினார்.
மகன் உயிரோடு இருந்திருந்தால், அவர்களின் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது தெரிந்திருக்கும்; அதற்கும் இப்போது வாய்ப்பில்லை.
எனவே, இனியும் எங்கள் குடும்பத்தைத் தொந்தரவுச் செய்யாதீர்கள் என தாம் மன்றாடி கேட்டுக் கொள்வதாக, Ho என அடையாம் கூறிக் கொண்ட அவர் சொன்னார்.