
சிரம்பான், ஜனவரி 8 – நெகிரி செம்பிலான் மாநிலத்தில், குடிநுழைவுத் துறையான JIM நடத்திய அமலாக்க நடவடிக்கையில் 77 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிரம்பான் மற்றும் அதன் அருகாமையிலுள்ள 13 இடங்களில் காலை 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை இந்த நடவடிக்கை நடைபெற்றது என்று குடிநுழைவுத் துறை இயக்குநர் Kennith Tan Ai Kiang தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் மொத்தம் 395 வெளிநாட்டவர்கள் சோதனை செய்யப்பட்டதில், 19 முதல் 47 வயதுக்குட்பட்ட 71 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில், இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மியான்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவர். இதில், சிரம்பான் நகரிலுள்ள ஒரு சோப்பு தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து மட்டுமே 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான பயண ஆவணங்கள் இல்லாமை, அனுமதி காலம் முடிந்தும் தங்குதல் உள்ளிட்ட குடிநுழைவுச் சட்டங்களை மீறியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அனைத்து கைது செய்யப்பட்டவர்களும் மேல் விசாரணைக்காக லெங்கெங் குடிநுழைவு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.



