
சிரம்பான், ஏப்ரல் 24 – இன்று அனைத்துலக தங்கும் விடுதி அமைப்பான ALOFT தங்கும் விடுதிகளைச் சிரம்பானில் அறிமுகப்படுத்தும் ஒப்பந்தத்தில் பன்னாட்டு ஹோட்டல் நிறுவனமான அனைத்துலக மாரியட் நிறுவனம் (MARRIOTT INTERNATIONAL) சிட்டா நிறுவனத்துடன் (CITTA) கையெழுத்திட்டது. இத்திட்டம் 2025 இறுதியில் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தங்கும் விடுதி, சிரம்பான் நகர மையத்தில் வணிக வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் டெர்மினல் 1 பேருந்து நிலையம், சிரம்பான் கேடிஎம் ரயில் நிலையம் மற்றும் வரவிருக்கும் சிரம்பான் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் நடந்து செல்லும் தூரத்தில் இருக்கும் என்று அறியப்படுகின்றது.
தொடர்ந்து இத்தங்கும் விடுதி நகரத்திற்கு ஒரு புதிய விருந்தோம்பல் அனுபவத்தைத் தரும் என்று ஆசிய பசிபிக் மேம்பாட்டுத் துணைத் தலைவர் ஆண்ட்ரி சுசிலோ கூறினார்.
அலோஃப்ட் தங்கும் விடுதி 173 நவீன அறைகள், சமையலறையுடன் கூடிய நாள் முழுவதும் இயங்கும் உணவகம், கிராப் & கோ விற்பனை நிலையம் (Re:Fuel), பிராண்டின் W XYZ® பார், வெளிப்புற நீச்சல் குளம் மற்றும் ரீசார்ஜ் உடற்பயிற்சி மையம் ஆகிய வசதிகளோடு இயங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.