
ரியோ டி ஜெனிரோ, மே-5, உலகப் புகழ்பெற்ற பிரேசில் கடற்கரையான, கோப்பா கபானாவில் பிரபல அமெரிக்கப் பாடகி லேடி காகா நடத்திய இசைக் கச்சேரியில், வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
வெறுப்புணர்வு மற்றும் இளையோர் மத்தியில் தீவிரவாத சிந்தனைகளைத் தூண்டும் கும்பலொன்று அந்த சதித் திட்டத்தைத் தீட்டியதாக, பிரேசில் போலீஸார் கூறினர்.
சொந்தமாகத் தயாரித்த வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டைப் பயன்படுத்தி அத்தாக்குதலை மேற்கொள்ள, இளையோர் உள்ளிட்டவர்களை அக்கும்பல் சேர்த்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.
எனினும், உளவுத் தகவல்கள் அடிப்படையில் அத்திட்டத்தை முறியடித்த போலீஸ், 2 சந்தேக நபர்களைக் கைதுச் செய்தது.
அவர்களில் ஒருவன் அக்கும்பலின் தலைவனாவான்; சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததன் பேரில் அவன் கைதானான்.
இன்னொருவனோ, சிறார் ஆபாசப் படங்களை வைத்திருந்ததன் பேரில் கைதுச் செய்யப்பட்டான்.
இளையோர் குறிப்பாக பதின்ம வயதினர் மத்தியில் தீவிரவாத சிந்தாந்தத்தைப் பரப்ப, அக்கும்பல் code word எனப்படும் இரகசியக் குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.
பொது மக்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியமெனக் கூறிய பிரேசில் போலீஸ், அந்நாட்டில் பெரு விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளைக் கெடுக்கும் இது போன்ற முயற்சிகள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுமென்றது.
இவ்வேளையில், லேடி காகாவின் இசைக் கச்சேரி எவ்வித இடையூறும் இன்றி நடைபெற்று முடிந்தது.
2 மில்லியன் பேருக்கும் மேல் கண்டு களித்த அக்கச்சேரி, தனது வாழ்நாளில் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வதாக லேடி காகா வருணித்தார்