
கோலாலம்பூர், ஜன 15 – ம.இ.கா தலைமையக பணியாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் வைக்கும் வைபவம் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன் கலந்துகொண்ட இந்த நிகழ்சியில் ,துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் , தேசிய உதவித் தலைவர்களான டத்தோ முருகையா, டான்ஸ்ரீ ராமசாமி, தேசிய பொருளாளர் டத்தோ
சிவக்குமார் நடராஜா , ம.இ. கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் அர்விந்த் கிருஷ்ணன், தேசிய மகளிர் பிரிவு தலைவி சரஸ்வதி, மத்திய செயவை உறுப்பினர்கள், தொகுதி தலைவர்கள் மற்றும் ம.இ.கா தலைவர்களும் இதில் கலந்துகொண்டு பொங்கல் பானையில் பால் ஊற்றி பொங்கல் வைத்தனர்.
ம.இ.கா தலைமைத்துவம் , இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு மற்றும் ம.இ.கா தலைமையக பணியாளர்கள் என 3 பிரிவினரையும் பிரதிநிதிக்கும் வகையில் மூன்று பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.
இந்த நிகழ்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு இந்திய சமூகம் கல்வி ,பொருளாதாரம் உட்பட அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு ம.இ.கா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
கட்சி மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களும் வெற்றி பெறுவதற்கு இந்திய சமூகம் மற்றும் ம.இ.கா உறுப்பினர்களின் ஒற்றுமையும் ஆதரவு மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ம.இ.காவின் புதிய தலைமையகம், வர்த்தக மையங்களை உட்படுத்திய மூன்று கோபுரங்களை கட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த நடவடிக்கை ஒரு புறம் இருந்தாலும் இந்திய சமூகத்திற்கான உரிமைகள் மற்றும் அவர்களுக்கான சேவைகளை வழங்குவதில் ம.இ.கா தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வரும் என்றும் விக்னேஸ்வரன் உறுதியளித்தார்.