
ஷா ஆலாம், பிப்ரவரி-26 – சிலாங்கூரில் 56 பன்றிப் பண்ணைகளில் உள்ள 250,000 பன்றிகளில் 76,000 பன்றிகளுக்கு ASF எனப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.
ஜனவரி 28 முதல் பதிவான எண்ணிக்கை அதுவென, சிலாங்கூர் கால்நடை சேவைத் துறையின் இயக்குநர் Dr Hassuzana Khalil தெரிவித்தார்.
ஒரு பண்ணைக்கும் மற்றொரு பண்ணைக்கும் இடையிலான தூரம் அதிகபட்சம் 1 கிலோ மீட்டர் மட்டுமே என்பதால், நோய் வேகமாகப் பரவுவதாக அவர் சொன்னார்.
இந்த ASF பன்றிக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த, 1953-ஆம் ஆண்டு விலங்குகள் சட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நோய் பரவியப் பண்ணைகளில் இருக்கும் அனைத்துப் பன்றிகளும் 7 நாட்களில் அழிக்கப்பட வேண்டுமென பண்ணை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதும் அவற்றிலடங்கும்.
நேற்று பிற்பகல் வரை 14 பண்ணை உரிமையாளர்களுக்கு அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1,200 பன்றிகள் கொல்லப்பட்டு விட்டதாகவும் Hassuzana சொன்னார்.
பன்றிகளை இடம் மாற்றுவதும் சிலாங்கூருக்குள் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டுமென கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக வெட்டப்படும் இடங்களுக்கு பன்றிகளைக் கொண்டுச் செல்ல தனிப் பாதைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அப்பாதையைப் பின்பற்றா விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் நிதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என அவர் எச்சரித்தார்.