
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-7 – 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியிலிருந்து சிலம்பம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் தருவதாக, DSK எனப்படும் Dinamik Sinar Kasih Malaysia சமூக நல சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கூறியுள்ளார்.
கடந்தாண்டு சரவாக்கில் நடைபெற்ற சுக்மாவிலேயே சிலம்பம் இடம்பெற்றிருந்தது; ஆனால் சிலாங்கூர் சுக்மாவுக்கு இறுதிச் செய்யப்பட்ட 34 விளையாட்டுகளில் சிலம்பத்திற்கு இடம் இல்லை.
இந்தியர்களின் பாரம்பரியத் தற்காப்புக் கலையான சிலம்பத்திற்கு ஏற்பட்ட இந்நிலைமை, சிலம்ப விளையாட்டாளர்களின் கனவுகளை சுக்குநூறாக உடைத்திருப்பதாக சிவகுமார் வேதனைத் தெரிவித்தார்.
புதிதாக கபடி போட்டி சுக்மாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடையும் அதே வேளை, சிலம்பத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரம் காரணங்களைக் கூறினாலும், சிலம்பத்தை நிலை நிறுத்தியிருக்க வேண்டும்; பல்வேறு விஷயங்களில் தொடர்ச்சியாக இந்தியர்களை இப்படி ஏமாற்றக் கூடாது என சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பத்தை நீக்கிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் முடிவு மிகவும் கவலையளிப்பதாக, குவாலா லங்காட் மாவட்ட சிலம்பக் கழகத் தலைவர் ஸ்ரீதரன் ரங்கநாதன் தெரிவித்தார்.
மலாய்க்காரர்களுக்கு சீலாட் (Silat), சீனர்களுக்கு வூஷு (Wushu) இருக்கும் போது, இந்தியர்களின் ஒரே தற்காப்புக் கலையான சிலம்பத்தை மட்டும் நீக்குவதற்கு காரணம் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.
இம்முடிவு நாடு தழுவிய நிலையில் சிலம்பம் கற்று வரும் மாணவர்களின் உற்சாகத்தைக் குறைத்துள்ளது.
குறிப்பாக குவாலா லங்காட்டில் மட்டுமே சுமார் 700 மாணவர்கள் சிலம்பப் பயிற்சியைப் பெற்று வருகின்றனர்; அவர்களில் 50 பேராவது சுக்மாவுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அவர்களின் கனவு கலைந்திருக்கிறது; இது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றென ஸ்ரீ தரன் வேதனையுடன் சொன்னார்.
சிலாங்கூர் சுக்மாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டுகள், முக்கியப் போட்டிகளில் பரவலாக இடம் பெற்று வரும் விளையாட்டுகளாகும்.
அவ்வகையில், சிலம்பம், ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசியப் போட்டி, சீ போட்டி என முக்கியப் போட்டிகளில் இடம் பெறவில்லை என்பதால், அது சிலாங்கூர் சுக்மாவில் இடம் பெறவில்லை.
மற்றபடி, இது இன ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது என, அமைச்சர் ஹானா இயோ முன்னதாகத் தெளிவுப்படுத்தியிருந்தார்.
அப்படிப் பார்த்தால், கராத்தே, கபடி, ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
எனவே, சிலம்பம் நீக்கப்பட்ட முடிவு இனம் சார்ந்தது அல்ல என்பதை அவர் மீண்டும் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு சரவாக் சுக்மாவில் 654 அல்லது 8 விழுக்காட்டு இந்திய விளையாட்டாளர்கள் பங்கேற்றதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.