
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8 – 2026 சிலாங்கூர் சுக்மாவிலிருந்து சிலம்பப் போட்டி நீக்கப்பட்டுள்ளது குறித்து, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் தெரிவித்துள்ளார்.
இது வெறும் ஒரு விளையாட்டு அல்ல; அடையாளம், கட்டொழுங்கு, மற்றும் இந்தியர்களின் வரலாற்றை பறைசாற்றும் பாரம்பரிய தற்காப்புக் கலையாகும்.
இந்நிலையில், அதனை சுக்மாவிலிருந்து நீக்கியுள்ளது ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்தையே கவலையில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் இவ்விவகாரத்தில் இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சரையோ, பிரதமரையோ குறைக் கூறுவதில் நியாயமில்லை.
காரணம், இது முழுக்க-முழுக்க சுக்மா உச்ச மன்ற முடிவாகும்; இதில், அந்த உச்சமன்ற உறுப்பினரும், மாநில விளையாட்டுத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள ஒரே இந்தியர் ஆட்சிக் குழு உறுப்பினருமான நபரே, என்ன நடந்தது என்பது குறித்து பகிரங்க விளக்கம் அளிக்க வேண்டும்.
சிலம்பத்தை நீக்க முடிவெடுக்கப்பட்ட முக்கியக் கூட்டத்தில் அவர் பங்கேற்காமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; இந்த ‘அலட்சியத்துக்கு’ அவர் பதில் சொல்லியே தீர வேண்டுமென லிங்கேஷ்வரன் வலியுறுத்தினார்.
ஏதேதோ நிர்வாகக் காரணங்களைச் சொல்லி, பாரம்பரியக் கலையை நாம் அழித்து விடக் கூடாது.
எனவே, சிலாங்கூர் அரசாங்கம் தனது முடிவை மாற்றிக் கொண்டு, அடுத்தாண்டு சுக்மாவில் சிலம்பத்தை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும்; இதன் வழி ஒரு முன்னுதாரணத் தலைமைத்துவத்தை அது கடைபிடிக்க வேண்டும் என லிங்கேஷ்வரன் வலியுறுத்தினார்.