
ஷா ஆலாம், மார்ச்-8 – சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான மாபெரும் சதுரங்கப் போட்டிகளில் ஒன்றாக ‘TSV தமிழ்ப் பள்ளிகளுக்கான சதுரங்கப் போட்டி 2026’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 14 ஆம் தேதி, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஷா ஆலாம், சுங்கை ரெங்காம் தமிழ்ப் பள்ளியின் மாநாட்டு மண்டபத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
சிலாங்கூர் ம.இ.கா ஏற்பாட்டில் மாநில தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இப்போட்டியில் மாநிலம் முழுவதுமிருந்து வரலாறு காணாத வகையில் 524 மாணவர்கள் போட்டியில் பங்கேற்கப் பதிவுச் செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் கூறினர்.
இதில் 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிரிவில் 370 மாணவர்களும், 9 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கான பிரிவில் 154 பேரும் பங்கேற்கின்றனர்.
மொத்தமாக 206 மாணவிகள் கலந்துகொள்வதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றியாளர்களுக்கு சாம்பியன், இரண்டாம் , மூன்றாம், நான்காம் இடம் உள்ளிட்ட ஆறுதல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த பள்ளிக்கான விருதுடன், சிறந்த ஆண், பெண் வீரர்களும் தேர்வுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு இலவசப் பதிவு, காலை உணவு மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த முயற்சி, மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்கவும், ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான போட்டி உணர்வை ஊக்குவிக்கவும் நடத்தப்படுகிறது.
இந்த செய்தியாளர் சந்திப்பில், சிலாங்கூர் ம.இ.கா தலைவர் டத்தோ ஷங்கர் ராஜ் ஐயங்கார், ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் சிலாங்கூர் ம.இ.கா செயற்குழு உறுப்பினருமான சேகரன் D, சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் தமிழரசு சுப்ரமணியம், சிலாங்கூர் சதுரங்க சங்கத்தின் தலைவர் T. குமரேசன், ம.இ.கா தேசிய ஊடகப் பிரிவுய்த் தலைவர் L. சிவ சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



